தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்காக (தனி நாடு) பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், பேர் குற்றம் மீதான சர்வதேச விசாரணைக் குழுவில் ஆசிய நாடுகள் இடம்பெறக் கூடாது, ஐநாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் தொடர்ந்து 3வது நாளாக இன்று உண்ணாநிலைப் போராட்டத்தில்… தவிர்க்க இயலாத காரணத்தால் செவ்வாய் வரை அவர்களுடன் நேரில் இணைய இயலாத நிலையில் இப்பொழுது இயன்றது இந்த பதிவு…
கடந்த வருடம் கிட்டதட்ட இதே நேரம், Sri Lanka’s Killing Fields என்ற ஆவணப்படம் வெளியானதும் #KillingFields பரவலாக பேசப்பட்டது. பல உணர்ச்சிகரமான கீச்சுகளுக்கு பிறகு வழக்கம்போல் மறக்கவும் பட்டது . இன்று #LoyolaHungerStrike.
https://twitter.com/_santhu/status/310431279256580096
சென்ற வருடம் மகத்தான எழுச்சியை கண்டது இணையம், ஆனாலும் ஒரு வருடம் கழித்து இன்றும் அதே கோரிக்கைகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்.
அன்று என்ன சாதித்துவிட்டோம், இன்று என்ன சாதிக்க இருக்கிறோம் என நான் என்னிடம் கேள்விக்கேட்டுக்கொள்ளும் பொழுது, இந்த போராட்டம் மாநிலம் முழுதும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது, மற்ற மாவட்டங்களிலும் மாணவர்கள் பேராட தொடங்கியுள்ளார்கள், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் மாநில அளவில் மாணவர்கள் ஒன்றிணையும் நிகழ்வு கட்டாயம் வெற்றிப்பெறும் என பலரும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இந்த பேராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டம் அளவிற்கு பெரிதாகுமா? மாணவர்களின் கோரிகைகள் ஏற்கப்படுமா? இந்த ஒப்பிடுதல் சரியா?
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் 47 வருடங்கள் முன் நடந்த நிகழ்வு, இன்று 65+ வயதிலிருப்பவர்களுக்கு மட்டுமே அணுபவநினைவிருக்கக்கூடியது. அந்த பேராட்டத்தை பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
இந்திய குடியரசின் முதல் 15 வருடங்கள், அதாவது 1965 வரை பாரதத்தின் அலுவல் மொழிகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலமாகவும், அதன் பிறகு ஹிந்தி மட்டுமேலுவல் மொழியாக இருக்குமென அரசியல் சாசனத்தின் ஷரத்து 343ல் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, ஷரத்து 346ன் படி நடுவண் அரசுக்கும் மாநில அரசுக்குமிடையேயான அனைத்து தொடர்புகளும் ஹிந்தி மொழிக்கு மாறிவிடும். இந்த கட்டாய ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தொடர்ந்து வலுத்து வந்தது. குறிப்பிட்ட தேதி நெருங்க நெருங்க உஷ்ணம் கூடுகிறது. The Tamil Nadu Students Anti Hindi Agitation Council தொடங்கப் படுகிறது. குடியரசு தினத்தை ஒற்றுமையாக கொண்டாட மொழி மாற்றதிற்கான திகதியை ஒரு வாரம் தள்ளிப்போட பிரதமரிடம் அண்ணாதுரை வேண்டுகிறார். கோரிக்கை மறுக்கப்படவே, ஜனவரி 26, 1965 துக்கநாளாக அனுசரிக்க படுமென அண்ணா அறிவிக்கிறார். மதராஸ் முதல்வர் பக்தவச்சலம் “குடியரசு தினத்தின்” புனிதத்தை மாசுபடுத்த முயல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது எனவும் சொல்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா உட்பட பலர் கைது செய்யப்படுகிறார்கள். தொடர்ந்து ஜனவரி 26ம் தேதி 50,000 மாணவர்களை கொண்ட ஒரு பேரணி தலைமை செயலகம் செல்கிறது, ஆனால் மாணவர்களை சந்திக்க வேண்டிய அவசியமில்லை என பக்தவச்சலம் மறுக்கிறார். மறுநாள் மதுரையில் திலகர் திடல் நோக்கி ஒரு மாணவர் பேரணி நடைப்பெறுகிறது.. அப்பொழுது
As the procession approached the Congress Party district office at North Masi Street, some Congress “volunteers” who had arrived in a Jeep shouted insults and obscenities at the students. A volley of sandals from the students returned the insult. The provoked Congress volunteers, who ran back into the Party’s office, returned with knives and attacked students, wounding seven.
– Hardgrave, Robert L. “The Riots in Tamilnad: Problems and Prospects of India’s Language Crisis.” Asian Survey 5, no. 8 (1965): 399–407. https://doi.org/10.2307/2642412.
இதை தொடர்ந்து போராட்டம் வெடிக்கிறது, தொடர் போராட்டம் சில இடங்களில் வன்முறையாகவும் உருவெடுக்கிறது. இரண்டு வாரங்கள், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் தாக்கத்தை அனைவருமே அறிவோம். தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த இரு மந்திரிகள் பதவி விலகுகிறார்கள். (பதவிவிலகலை குடியரசு தலைவர் ஏற்கவில்லை) தொடர் போராட்டத்தை தொடர்ந்து February 11 அன்று லால் பகதூர் சாஸ்திரி, அகில இந்தியா வானொலியில் கீழ் கண்ட வாக்குறுதிகளை அளிக்கிறார்.
Every state will have complete and unfettered freedom to continue to transact its own business in the language of its own choice, which may be the regional language or English. Communications between one State to another will either be in English or will be accompanied by authentic English translation. The non-Hindi states will be free to correspond with the Central Government in English and no change will be made in this arrangement without the consent of the non-Hindi States. In the transaction of business at the Central level, English will continue to be used. The All India Civil Services examination would continue to be conducted in English rather than in Hindi alone.
இதை தொடர்ந்து போராட்டத்தின் தீவிரம் குறைகிறது. ஆனால் அந்த அலட்சிய செயல்பாட்டினால் காங்கிரஸ் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பினை எப்பொழுதைக்குமாக இழந்தது. அது மாணவர் சக்தியின் மாபெரும் சாதனை. இன்று இத்தகைய வெற்றி சாத்தியமா?
இன்றைய மத்தியில் அரசியல் நிலை அதேதான், சாஸ்திரியின் ஹிந்தி ஆதரவு மனப்பான்மையும், சோனியாவின் இலங்கை ஆதரவு மனப்பான்மையையும் ஒப்பிடலாம்.
ஆனால் மாணவர்கள்?? மாணவர்கள் தரப்பில் மூன்று முக்கியமான வேறுபாடுகளை காண முடிகிறது.
1. அன்று ஹிந்தி எதிர்ப்பு மாணவர்களின் வாழ்வாதாரத்தை அசைப்பதாக இருந்தது. அரசு வேலை என்பது பெருங்கனவு. தேர்வுகள் ஹிந்தியில் நடந்தால் தேர்ச்சி என்பது வெறுங்கனவு. இன்றோ இலங்கை தமிழர் வெளிநாட்டவர்! கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைகள், அரசின் சட்ட நடவடிக்கைகள், போலிஸின் அடக்குமுறைகள் போன்றவற்றை எதிர்கொண்டு போராடும் அளவிற்கு மாணவர்களின் மனதிற்கு நெருக்கமான பிரச்சனையா இது?
2. மேலும், அது அரசியல் அறிதல் மாணவர்களிடம் பரவலாக இருந்த காலம். சுதந்திர போராட்டத்தின் நினைவுகள் பசுமையாக இருந்தது. கம்யுனிசம் போன்ற அமைப்பு சார்ந்த செயல்பாடுகளும் வலுவாக இருந்தது. தமிழுக்காக 9 பேர் தங்கள் உயிரை அளித்தனர்.
இன்றும் செங்கொடியும் முத்துக்குமாரும் நம்மிடையே வாழ்ந்தாலும், மாணவர் சமூகத்தில் எத்தனை பேர் அவர்களை அறிவார்கள்? மாணவர்களை குறை சொல்வதற்கில்லை. மானுடவியல் சார்ந்த கல்வி தன்னளிவில் உலகை, சமூகத்தை, அரசியலை புரிந்துக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது. ஆனால், இன்றைய பெரும்பான்மை மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளின் பொறியில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவதற்கும், assignments, reports, recordsஐ எழுதி முடிப்பதற்குமே முழு நாள் போதுவதில்லை. கூடவே, மேல்படிப்பிற்கான, பணிதேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள். இவற்றின் வெளியே கிடைக்கும் சிறிது நேரத்தை இளைபாற்றும் கேளிக்கைகளில் தான் செலவிடுவார்கள். செய்தித்தாள் அல்லது புத்தகங்களை வாசித்து, சமூக வரலாற்று புரிதலை அடைந்துள்ள மாணவர்கள் மிக குறைவாகவே இருப்பார்கள்.
3. இந்த அரசியல் அறிதலின்மைக்கு இன்னொரு காரணம் கல்லூரிகளிலிருந்து மறைந்து போன அரசியல். மாணவர் எழுச்சி மூலம் ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள், கல்லூரிகளில் மாணவர் சங்க தேர்தல்கள் நடைபெறக்கூடாது என கல்லூரிகளுக்கு அழுத்தம் தருகின்றன. தமிழகத்தில் 5%ற்கும் முறைவான கல்லூரிகளில் மட்டுமே மாணவர் சங்க தேர்தல்கள் நடைபெறுகின்றன என கல்வியாளர்கள் கூறுகிறார்கள். அரசியல் மட்டுமல்ல, தனியார் கல்லூரிகள், குறிப்பாக பொறியியல் கல்லூரிகள் மாணவர்களின் எல்லா செயல்பாடுகளையும் கண்கானித்து கல்விக்கு வெளியே எதை செய்தாலும் தடைசெய்யும் மனநிலையில் இருக்கின்றன. ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் பெற்றோரை அழைத்து வர வேண்டும், ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால், அவசியமில்லாமல் வகுப்பிற்கு வெளியே போனால் அபராதம் என மாணவர்கள் முதிர்தவர்களாக இல்லாமல் சிறுவர்களாக நடத்தப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடுகளை மீறி மாணவர்கள் ஒன்று திரண்டு, நிர்வாகத்திற்கு எதிராக நின்று போராடுவது மிக கடினம். மாணவர்களின் எதிர்காலம் நிர்வாகத்தின் கையில் எனும் பொழுது, பெற்றோர் மற்றும் நிர்வாகத்தின் ஆதரவு இல்லாமல் ஒரு பேராட்டம் சாத்தியமில்லை என்பதே இன்றைய நிலை.
இவற்றை கருத்தில் கொள்ளும் பொழுது, லயோலா மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழகம் முழுதும் எந்த வகை ஆதரவு இருக்குமென கவலையுடன் எதிர் நோக்குகிறேன். தமிழகம் முழுதும் உள்ள மாணவர்கள் திரண்டு எழாவிட்டால் மத்திய அரசு அல்ல உள்ளூர் ஊடகத்தின் கவனத்தை கூட நம் பக்கம் திருப்ப இயலாது. இன்று உண்ணாவிரத போராட்டம் இரண்டாம் பக்க பெட்டி செய்தி.
மாணவர்களிம் போராட்டம், கோரிக்கைகள், இந்தியா அரசின் சமீப செயல்பாடுகள் பற்றி அறியாதவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு:
ஐநா சபையின் மனித உரிமை ஆணையம், United Nations Human Rights Council ஜெனிவாவில் நிகழும் தங்கள் கூடுகைகளில் உலகம் முழுதும் எழும் மனித உரிமை மீறல் குறித்த புகார்களை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்.
மனித உரிமை சார்ந்து ஐநாசபை முன்மொழிந்த பல தீர்மானங்களில் கையொப்பமிட நாடு இலங்கை. அகதிகள், போர் குற்றவாளிகள் போன்றவர்களை எப்படி கையாள்வது போன்ற கையேடுகளும், civilians எனப்படும் போராளி அல்லாதவர்கள் மீது தாக்குதல் கூடாது என்பதும் சில வகை ஆயுதங்களை (eg sulphur bombs, cluster bombs) உபயோகிக்க கூடாது போன்ற நெறிமுறைகளும் இதில் அடக்கம். கவனிக்க, இரு எதிரி நாடுகளுக்கிடையே நடக்கும் போரில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் இவை. தன் சொந்தநாட்டு மக்கள் மீதே இந்த நெறிமுறைகளை மீறி தாக்குதல் நடத்திய இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வர இருக்கிறது.
இலங்கை அரசு தானே ஒரு குழு நியமித்து, தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை தானே விசாரிக்க அமைத்த Lessons Learnt and Reconciliation Commission அளித்த அறிக்கையை ஏற்க இயலாது என சென்ற ஆண்டே அமெரிக்கா கூறி விட்டது.
இப்பொழுது அமேரிக்கா கொண்டு வரப்போகும் தீர்மானத்தின் வரைவு கீழே
இந்த தீர்மானதிற்கு ஆதரவாய் வாக்களிக்க இந்தியா தயங்குகிறது. ஐநாவில் தீர்மானம் நிறைவேறப்பட்டால், இலங்கை அந்த தீர்மானத்தின் படி நடக்கவில்லை என்றால் உலக நாடுகள் பொருளாதார தடை உட்பட பல வகை நடவடிக்கைகள் எடுக்கலாம்.
ஐநா பார்வையாளருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் மற்றும் போர் குற்றங்கள் மீது சர்வ தேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற இரண்டும் இந்த தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள். இவை இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தயிடுவதால் இந்த தீர்மானத்தை ஆதரிக்க இயலாது என்பது இந்தியா அரசின் தரப்பு. இதனை ஒட்டி எழுந்த விவாதத்தில் தான் தயாநிதி மாறன் எல்லாம் நீலி கண்ணீர் வடித்தார்கள்.
//India also needs to strengthen diplomatic steps to avoid a war in the island nation, said the minister while stating that he shared the sense of the house.//
வெளியுறவு துறை அமைச்சரின் வாதம் பாருங்கள். அந்த தீர்மானதிற்கு ஆதரவு அளிப்பதால் இலங்கையுடன் போர் எழுமாம்.
சரி, நம் மாணவர்களின் கோரிக்கை என்ன?
இதில் எவையெல்லாம் சாத்தியம் என்று தெரியவில்லை. சர்வதேச விசாரணை வேண்டி அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க மறுக்கும் இந்தியா எப்படி தானாக ஒரு தீர்மானம் கொண்டு வரும்?
இவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறினால் தமிழனாய் பிறந்ததற்கு பேருவகை கொள்வேன் என்றாலும், கற்பழிப்பிற்கு எதிராக ஒரு சட்டம் கொண்டு வரும் அளவிற்கு கூட ஒற்றுமை இல்லாத மந்திரி சபை கொண்ட இந்தியானாய் பிறந்ததற்கு வெட்க படும் நிலையே தொடரும் என்பது நிதர்சனம்.
இவர்களது கோரிக்கைகள் நிறைவேறா விட்டாலும் இவர்கள் சாதிக்கப்போவது நிறைய. ஓட்டு மொத்த தமிழகத்தின் கவனமும் இன்று இவர்கள் மீது. ஒரு சசி பெருமாளால் மாநிலத்தை மது விலக்கு பற்றி பேச வைக்க இயலுமென்றால் 8 மாணவர்களால் என்னவெல்லாம் இயலும்?
மாணவர்கள் போராடுகையில் அடுத்த தலைமுறையின் கவனம் ஒட்டுமொத்தமாக இவர்களின் கோரிக்கைகள் மீது திரும்பும். அவர்கள் அனைவரும் தெருவில் இறங்கி போராட வேண்டாம், இந்த செய்தி அடுத்த தலைமுறையை சென்றடைவதே மிகப்பெரிய விஷயம். மேலும் அதில் ஒரு சிறு பகுதியினர் போராட தொடங்கினாலும் அதன் வீச்சு பெரிதாக இருக்கும், தமிழகம் முழுதும் எதிரொலிக்கும். அரசியல் ஆதாயதிற்காகவோ எதற்கோ, அரசியல் கட்சிகள் சில முடிவுகள் எடுக்க நிர்பந்திக்கப்படலாம். யோசித்து பாருங்களேன், திமுக மந்திரிகள் பதவி விலகினால்? தமிழக கட்சிகள் அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து குரல் கொடுத்தால்? இன்று வெறுங்கனவாய் தெரியும் இவையெல்லாம் இந்த போராட்டம் இதே போல் நீடித்தால் சாத்தியம்.
மாணவர்கள் மட்டுமே போராட வேண்டுமென்றில்லையே, உணர்ச்சி உள்ள அனைத்து தமிழனும் களம் இறங்கலாம்.
முதல் பொறி.. பற்ற வைத்து விட்டனர் நம் தம்பிகள்.. தீ கொழுந்து விட்டு எரிய செய்வது நாம் பொறுப்பு…
அந்த 8 பேர் சிறு துளி… பெரு வெள்ளமாக தமிழகம் திரல்வது சாத்தியமில்லாததா?
அதை அடைய, நமது #tag அல்லது முகநூல் போராட்டம் மட்டுமே போதாது அல்லவா???
என்ன செய்ய, என்னால் களத்தில் இறங்கி போராட இயலாது என்பவர்களுக்கு நான் சென்ற வருடம் எழுதிய twitlongerஐ பகிர விரும்பிக்கிறேன்.
தோழர்கள் அனைவருக்கும் சிறு வேண்டுகோள். இப்பொழுது நாம் #KillingFields கீச்சுவதன் நோக்கம் என்ன? அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டுமென்றா? அதான் இன்று ஆதரவு தருவதாய் பாரத பிரதமர் அறிவித்து விட்டாரே, இத்தோடு முடித்துகொள்வோமா??? இல்லை தீர்மானம் நிறைவேற வேண்டும் என்கிறீர்களா?? மார்ச்சு 23 தீர்மானம் நிறைவேறியவுடன் நிருத்திகொள்வோமா?? (தீர்மானமே உபயோகமற்றது என்ற கருத்து இருந்தாலும some thing is better than nothing)
நாம் என்ன செய்கிறோம் என்ன செய்ய விரும்புகிறோம்??? ஈழ தமிழரின் வாழ்வில் மாற்றம் தான் குறிக்கோள் என்றால், நேற்று காஞ்சி மன்ற தோழி குறிப்பிட்டதுபோல் விஷயம் அறிந்த நாம் நமக்குள் பேசிக்கொள்வதால் ஆகப்போவது என்ன? இணையத்தில் பேச வேண்டாம் என கூறவில்லை அனால் அதையும் தாண்டி செய்ய வேண்டியது நிறைய. பெரிதாய் எதுவும் வேண்டாம். உங்களால் இயன்ற சிறு சிறு முயற்சிகள்…
1) தமிழரில் ஈழத்தின் கோரம் அறிந்தவர் எதனை சதவிகிதம்? இணையத்தின் வெளியே நீங்கள் பார்க்கும் எத்தனை பேர் இதை பற்றி அறிவார்கள்? ஊடகங்கள் தங்கள் கடமையை செய்ய தவறும் பொழுது தகவல்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பது நமது கடமை அல்லவா? இதை பற்றி இணையத்தில் பேசுவதை விட அதிகம் வெளியே பேசுங்கள், பார்க்கும் அனைவரிடமும் இதை பற்றி கூறுங்கள். நேற்று மெரினா வந்திருந்த 2,000 பேரில் டிவிப்ஸ் விரல் விட்டு என்ன கூடிய அளவுதான். சாலையில் போராடும் குணம் டிவிட்டருக்கு வெளியே இருப்பவர்களுக்கு தான் அதிகம், முடிந்த அளவு அவரிடம் ஈழ சகோதர சகோதரிகள் சந்தித்த கொடுமைகளை கொண்டு சேர்ப்போம். பேருந்தில் பயணிக்கையில் பக்கதிருக்கை பயணியிடம், வீட்டு வேலை செய்பவர் முதல் சந்திக்கும் அனைவரிடமும் பகிர முயல்வோம்.
2) மற்றொரு தோழர் கூறியது போல் மாவட்டம் தோறும் உள்ள அகதிகள் மறுவாழ்வு முகாமில் அடைபட்டு கிடக்கும் உடன்பிறப்புகளுக்கு உங்களால் ஆன உதவிகள் செய்யலாம், பணமாக அல்லாமல் தகுதியானவர்களுக்கு வேலை வாங்கி தரலாம், அல்லது அடிப்படை கழிப்பிட வசதி கூட இல்லாதவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம், அவர்களில் பலர், மூன்று வேலை உணவு முழுதாய் உண்ண வழி இல்லாத நிலைமையில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க. உதவ பணம் இல்லை , வசதி இல்லை என்பது தடை இல்லை, உதவ பலர் தயாராய் இருக்கிறார்கள், உங்களிடம் நேரம் இருந்தால் இருவருக்கிடையேயான பாலமாய் இருக்கலாம்.
உங்கள் ஆதங்கத்தை பதிவதால் மட்டும் கடமை தீர்ந்து விட வில்லை, இங்கு தரும் குரலால் கடல் தாண்டி வாழ்வாரின் நிலையில் மாற்றம் உடனடியாக ஏற்ப்பட போவதில்லை, நமதருகில் நம்முன்னே வாழ்பவரின் வாழ்வில் மாற்றம் கொண்டு வர முடிந்தால் அதைவிட பேறு ஏது? இணையத்தில் பொங்கி தெறிக்கும் உணர்ச்சிகளை தயவு செய்து ஆக்கபூர்வமாக உபயோகிப்போம் .
Leave a Reply