மார்க்ஸிய வகுப்பு

தோழர் தியாகுவிடமிருந்து மார்க்சியத்தின் அடிப்படைகளை கற்க இரண்டு நாள் வகுப்பை டிசம்பர் 23 மற்றும் 24 அன்று சென்னையில் நண்பர்கள் காளிபிரசாத் மற்றும் சாம்ராஜ் ஒருங்கிணைத்திருந்தனர். 

இந்த வகுப்பிற்கு முன் மார்க்சியம் மற்றும் இடதுசாரிகளை இரண்டு வகையில் அறிந்திருந்தேன். முதலில் இடதுசாரி இயக்கங்கள். மக்கள் போராட்டங்கள், மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் சமூக செயற்பாட்டாளர்களாக. சமூகம் கடந்து செல்லும் பல அவலங்கள் மீது கவனத்தை திருப்பி, தீர்வை பெற்றுத்தந்ததில் இடதுசாரி இயக்கங்களின் பங்கு இன்றியமையாதது. சமூகத்தில் அவர்களின் இருப்பின் அவசியத்தை உணர்ந்ததால் அவர்களுடன் உரையாட முயன்றேன். அரசையும் அதிகாரத்தையும் எதிர்க்கும் அவர்கள் முன்வைக்கும் மாற்று என்ன என அறிந்துக்கொள்ள விரும்பினேன். மாணவர் இயக்கங்களில் இருப்பவர்கள், சமூக போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் என நான் உரையாடிய பலரும் வெறும் சதிக்கோட்பாடுகளை முன்வைப்பவர்களாக இருந்தனர். அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியம் என முழங்குபவர்களால் அந்த ஏகாதிபத்தியத்தின் இயங்குமுறையை விவரிக்க இயலவில்லை. முழக்கங்களுக்கான கற்பனை  எதிரிகளை மட்டுமே முன்வைத்தனர்.  “எல்லாத்தையும் மாத்தனும் தோழர், மக்களை அரசியல் படுத்தி மாற்றத்தை கொண்டு வரவேண்டும்” என சொல்லும் எவராலும் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன என விவரிக்க இயலவில்லை. குறுகிய கால அடிப்படையில் அவர்களால் மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் சாத்தியப்பட்டாலும், தெளிவான நோக்கம் இல்லாத எதிர்மறை செயல்பாடுகள் நீண்ட கால நோக்கில் ஆபத்தானவை என்றே தோன்றியது.  

அடுத்ததாக பொருளியல் சித்தாந்தத்தில் மார்க்சின் பங்கு. காலனியாதிக்க, நிலபிரபுத்துவ பொருளாதார கொள்கைகளை மறுத்து உற்பத்தியின் மூலம் வளத்தை / மிகையை உருவாக்கலாம் என ஆடம் ஸ்மித் சொன்னது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது மார்க்ஸ் முன்வைத்த மிகை உருவாக்கத்தில் ஊழியர்களின் பங்கு. மார்க்சின் இந்த கருதுகோளை அடியொட்டியே இன்று உபயோகிக்கப்படும் இறுதிநிலை கோட்பாடுகள் (marginal analysis) உருவாகின. ஆனால் மார்க்ஸ் பேசியது தொழிற்புரட்சியின் (ஆலை புரட்சியின்) காலகட்டத்தில். அன்று மனித உழைப்பின் பங்கு அத்தியாவசியமானது. பொருளியல் சிந்தனைகளின் அடிப்படைகளை கற்கும் எவருக்கும் மார்க்சின் முடிவுகள் இன்று  காலாவதியாகிவிட்டன என தெரியும். ஆனால் மார்கஸ் முன்வைத்த அடிப்படைகளும் கேள்விகளும் இன்று வரை அப்படியே தொடர்கின்றன. பெரும் முதல் தேவையில்லாத சேவைத்துறையில் மிகையை எப்படி பங்கிடுவது? அறிவுசார் தொழில்களில் உடல் உழைப்பு போல் அனைவரின் உழைப்பும் சமம் என கூற இயலாத சூழலில் மிகை பங்கீடு எப்படி இருக்க வேண்டும்? இன்றைய மார்க்ஸிய பொருளாதார தரப்பு இந்த கேள்விகளை எப்படி அனுகுகிறது என்ன பதில் தருகிறது என அறிய பலரிடம்  உரையாட முயன்றுள்ளேன். அடிப்படை பொருளியல் தர்க்கங்களை மறுப்பவர்கள், மார்க்சிய தீர்வின் தோல்வியை ஏற்க மறுப்பவர்களையே பெரும்பாலும் சந்திக்க நேர்ந்தது. 

Dialectics-யை அடிப்படையாக கொண்ட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களுடன் ஆக்கப்பூர்வமான ஒரு உரையாடலை முன்னெடுக்க முயன்று தொடர்ந்து தோற்றுக் கொண்டிருந்தேன். 

இந்த பின்னணியில் மார்க்சிய அணுகுமுறை மீது ஐயங்கள் இருந்தாலும் மார்க்சிய தரப்பின் முதன்மை சிந்தனையாளர்களில் ஒருவரிடமிருந்து அதன் அடிப்படைகளை கற்கும் அனுபவத்திற்கும் அறிதலுக்கும் எதுவும் ஈடாகாது என்பதால் இந்த வகுப்பில் கட்டாயம் கலந்து கொள்ள விரும்பினேன். தோழர் தியாகு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். மூலதனம் உட்பட பல மார்க்சிய படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 

மார்க்ஸ் எங்கெல்ஸ் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு, மார்க்ஸ் எழுதிய நூல்கள், அன்றைய அரசியல் வரலாறு என ஒரு வழமையான கட்டமைப்பில் வகுப்பை செலுத்தாமல், சமகால சமூகம் சந்திக்கும் சவால்களில் தொடங்கி அதன் அடிப்படையில் மார்க்சியத்தை அறிமுகம் செய்தார். 

தொடக்கத்திலேயே தோழர் தியாகு, மார்க்ஸ் வருங்காலத்தை கணிப்பவரோ, அனைத்திற்கான தீர்வுகளை சொல்பவரோ அல்ல, ரத்தம் சிந்தி நம்மை உய்விக்க வந்த தேவதூதனும் அல்ல என சொல்லி தொடங்கினார். புனிதங்களை கட்டமைக்காமல் சிந்தனைகளை சிந்தனைகளின் அடிப்படையில் அணுக வேண்டும் என முன்வைத்தார்.  மார்க்ஸின் சிந்தனையை பற்றி சொல்லும் பொழுது, “உற்பத்திக்கான பொருளியல் அடித்தளத்தின் மீது சமூக படிநிலைகள் உருவாகி வருகின்றன. உற்பத்தி முறைகள் மாறும் தோறும் சமூக அமைப்பும் மாறும். அப்படிப்பட்ட மாற்றத்தின் ஒரு படிநிலையில் அன்றைய தேவையின் எதிரொலியாக மார்க்சிய சிந்தனை எழுந்து வந்தது. அந்த அமைப்புகள் மேலும் மாறும் பொழுது மார்க்சியமும் காலாவதியாகும்” என மார்க்சியத்தின் எல்லைகள் தெளிவாகவே முன்வைத்தார். இந்த மாற்றங்களை கடந்து, சமூகத்திற்கு உகந்ததாக இருக்கும் அடிப்படை மார்க்சிய கருதுகோள்களை கொண்டு புதிய சூழலுக்கான புதிய தீர்வுகள் வடிவமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 

மார்க்சிய அடிப்படைகளை விளக்கிய பின் சூழியல் மற்றும் போர் ஆகிய இரண்டு உலகளாவிய சவால்களுக்கு மார்க்சிய நோக்கில் எப்படி தீர்வு காண்பது என விவரித்தார். தொடர்ந்து மார்க்சிய மெய்யியல் – இணைமுரண் பொருள்முதல்வாதம் (இயங்கியல் பொருமியம்) – குறித்த விரிவான அறிமுகத்தை அளித்தார். நண்பர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விரிவான பதிலளித்தார். மார்க்சியம் ஏன் சர்வாதிகாரமாக திரிந்தது, பல சூழல்களில் ஏன் தோற்றது என்பது குறித்தும்  விவாதித்தார்.

தோழர் தியாகு

இரண்டு நாட்களும் வகுப்புகளின் இடையே தனது மொழிபெயர்ப்பு சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து வந்தார். Das Kapital நூலை ஏற்கனவே மூலதனம் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருந்தாலும், மூலமுதல் என்ற தலைப்பில் Das Kapitalலை தனித்தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் தோழர் தியாகு இப்பொழுது ஈடுபட்டுள்ளார். 

தனித்தமிழ் சொல்லாக்கம் பற்றி அவர் குறிப்பிட்ட சிலவற்றை இங்கு பகிர விரும்புகிறேன். ஆங்கில சொற்களை தமிழாக்கம் செய்யும் பொழுது முதலில் வடமொழி சொற்களை பயன்படுத்தினர். தமிழில் உள்ள சமமான சொற்களை தேடவில்லை. அதன் பிறகு சொற்களை அதன் வளர்ச்சி போக்கு, உபயோகிக்கும் சூழல் போன்றவற்றை கருத்தில் கொள்ளாமல் தன்போக்கில் நேரடியாக தமிழில் மொழிபெயர்க்க தொடங்கினர். இந்த குறைகளை நீக்கி சொல்லின் பகைபுலத்தை கருத்தில் கொண்டு மொழிபெயர்க்கும் பொழுது வாசிப்பவர்களுக்கு முழுமையான அறிதல் சாத்தியமாகும். எடுத்துக்காட்டாக இயற்பியலில் singularly என்ற கருத்தை அப்படியே சிங்குலாரிட்டி என்றோ ஒருமை என்றோ எழுதுகிறார்கள். ஆனால் singularity என்பது ஒருமை அல்ல. Singular contribution என சொல்லும் பொழுது singular என்பதற்கு தனித்தன்மையானது, இயல்பிலிருந்து மாறுபட்டது என பொருள். Singularity நிலையில் இயற்பியல் விதிகள் எதுவும் செல்லுபடியாகாது. இந்தப் புரிதலின் அடிப்படையில் singularityயை இயன்வழுநிலை என மொழிபெயர்க்கலாம். அந்த சொல்லின் மூலமே வாசிப்பவருக்கு அதன் பொருளும் சென்றடையும்.

இன்னொரு எடுத்துக்காட்டாக அரசியல் சாசனத்தில் வரும் personal liberty என்ற பதத்தை தனிமனித சுதந்திரம் என மொழிபெயர்க்கிறார்கள். ஆனால் தனிமனித சுதந்திரம் என்றால் individual freedom. Individual freedom, collective freedom என எதுவும் இங்கில்லை. Personal liberty என்ற சொல்லின் வரலாற்றை plebeian போன்ற சொற்களில் இருந்து person, personal என்பவை எழுந்து வந்த சமூகவியல் பார்வையில் அணுக வேண்டும். அப்படி பார்க்கும்போது personal liberty என்பது ஒருவன் யாருக்கும் கட்டுப்பட்டவன் அல்ல என்ற நிலை. தன் மீது தன் செயல்களின் மீது முழு அதிகாரம் படைத்த மனிதன் person. இந்த பொருளில் personal liberty என்பதை தனிதமிழில் ஆளுடைமை சுதந்திரம் என மொழியாக்கம் செய்தார்கள். அதை மேலும் மெருகேற்றி தன்னுரிமை என மொழியாக்கம் செய்யலாம் என தெரிவித்தார். 

கண்முடித்தனமான முதலிய எதிர்ப்பு இல்லாமல், இடதுசாரி ஆட்சி முறையின் வீழிச்சியையோ, சித்தாந்தத்தின் குறைகளையோ மறுக்காமல் அனைத்தையும் ஏற்று பரிசீலனை செய்து ஆக்கப்பூர்வமான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேசும் ஒரு மார்க்சிய வகுப்பு, கண்முடித்தனமான தமிழாக்கத்தை முன்வைக்காமல் சொல்லில் உறைந்துள்ள வரலாற்றை கண்டடைந்து அதன் புரிதலோடு மொழியாக்கம் செய்வதை முன்வைக்கும் தனித்தமிழ் பார்வை. தனித்தமிழை எந்த சுய பெருமையுடனும் அணுகாமல் கற்பவனுக்கு அவனது மொழியில் இந்த சொற்கள் கிடைத்தால் அவனது கற்றல் எளிதாகும் என்ற ஒற்றை நோக்கில் அணுகும் தரப்பு என இந்த வகுப்பு நான் கண்டிராத பல புதிய அணுகுமுறைகளை அறிமுகம் செய்தது.  மிக இருகிய, உரையாட சாத்தியமே இல்லாத தரப்புகள் என நான் அறிந்திருந்த மார்ஸிய சித்தாந்தம் மற்றும் தனித்தமிழ் இயக்கத்தின் ஆக்கப்பூர்வமான சிந்தனை தரப்பை இந்த வகுப்பின் மூலம் அறிந்துக்கொண்டேன்.

எந்த மானுட சிந்தனையும் அதன் மாற்று சிந்தனையின் உச்சியில் இருக்கும், உயிர் விசையுடன் இயங்கும் தரப்புடன் உரையாடி மட்டுமே மேலும் முன்னகர முடியும். அவ்வகையில், சமகால வளர்ச்சிகள் மற்றும் மாற்றங்கள் அனைத்தையும் உள்வாங்கி தன்னை மறு கண்டடைவு செய்யும் இந்த தரப்புடனும் நவீன சிந்தனை முறைகள் உரையாட வேண்டிய தேவை உள்ளது. எனவே அறிவு செயல்பாட்டில் ஈடுபட விரும்புபவர்கள் அனைவரும் இவற்றை அணுகி அறிந்துக்கொள்வது அவசியம் என கருதுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *